
https://www.facebook.com/share/r/xZ1Vtw7aY2tSFBMi/?mibextid=D5vuiz
சந்திக்க நேரும் நாளில்
ஆயிரம் வார்த்தைகள்
அதற்குமுன் பேசி இருந்தாலும்
நேரில் காணும்
அக்கணம் திகைத்து
உறைந்து நிற்பேன்
நிச்சயம் உனக்கு திட்ட ஒரு காரணம்
என் உடைகளில் இருக்கும்
பார்வை படும் இடம் கண்டு
புரிந்து கொள்வேன்
எப்படியும் இதயம்
நெஞ்சுக்கூட்டை உடைத்து வெளியேற மூர்க்கத்துடன் முண்டும்
பொதுவெளி என்பதால்
கைகளை மட்டும் கோர்த்துக் கொள்வோம்
பரஸ்பரம் பசி தாங்க
மாட்டோம்
என்ன பிடிக்கும் இருவருக்கும்
தெரியும்
ஒன்று சொல்லி இருவரும்
பகிர்வோம்
யாரோ ஒருவர் பரிமாறுவோம்
வாய்ப்பிருந்தால்
ஒரு வாய் ஊட்டிக் கொள்ளலாம்
நீண்ட கதைகளிடையே
என் வீட்டில் நீ மறந்து விட்டு வந்த விளையாட்டு சாமான்கள் போல
ஒரு பரிசுப்பை தருவேன்
அதை மதிக்கவே மதிக்காமல்
முகம் பார்த்து பேசிக் கொண்டிருப்பாய்
எனக்குத் தர உன்னிடம் ஒரு பை
இருக்கும்
பெருசா ஒண்னுமில்ல சும்மா
என்பாய்
எதேச்சை போல்
ஆடையகம் நுழைவோம்
இங்கிருந்துதானா அந்த புகைப்படம்
எனக் கேட்க சில இடங்கள்
அழைத்து செல்வாய்
நீண்ட நாள் பிரார்த்தனைகள்
நேர்ச்சைக்கு சேர்ந்து போக
ஒரு கோவில் இருக்கும்
ஒரு பெரிய கோபத்திற்கு
மன்னிப்பு
கொஞ்சம் கேவல்
ஒரு அணைப்பு
இனி அழ வைக்க மாட்டேன்
இனி நான் …
இப்படி சில வாக்குறுதிகள்
சரி போதும்
நேரமாச்சு கிளம்பு
மறுபடி எப்போ
சீக்கிரம்
நிச்சயமா
சத்தியமா
அவ்வளவு போதும்
எனக்கு
அப்படித்தான் அன்பை சொல்லத் தெரியும்
உனக்கு
நமக்கும்
நேச மித்ரன் .